அரட்டை அரசவை

அந்தகால அரசவையில் இந்த கால நாட்டு நடப்புகளை அக்கால அரசரும்,மந்திரியும் சுத்த தமிழிலும்,இக்கால மக்கள் சென்னை தமிழிலும் பேசும் கோமாளித்தனமான உரையாடல் 

காவலர்:ராஜாதி ராஜா,கூஜாதி கூஜா,ராஜா மார்தாண்டா,வாசல் படி தாண்டா மாமன்னர் மாமா மன்னர் வரார் வரார் வரார்......

மன்னர்:அனைவருக்கும் என் வணக்கம்...

மந்திரிகள்:வணக்கம் தலைவா

மன்னர்:மந்திரியாரே..நாட்டு மக்கள் அனைவரும் செழிப்பாக உள்ளனரா..

manthiri:அனைவரும் கடுப்பாக உள்ளனர் மன்னா

மன்னர்:ஏன்..என்ன பிரச்சனை?

கபாலி:அத்த நான் சொல்றேன் தலைவா...

மன்னர்:தாங்கள் யாரு...தங்கள் குறை என்னவோ?

கபாலி:என் பேரு கபாலி.எங்க ஏரியால கொசு தொல்லை. 

மன்னர்:மின்விசிறி உபயோக படுத்தி கொசுவை விரட்ட வேண்டித்தானே.

கபாலி:அதான் மின்சாரம் இல்லையே.அப்புறம் எங்கத்த மின்விசிறி ஓடும்.கை விசிறி தான் ஓடிகிட்டு  அஹஹா ஆடிகிட்டு இருக்கு.

மன்னர்:அப்போ,வெளிய வந்து இயற்கை காற்றில் உலவ வேண்டித்தானே.

மந்திரி:அதுவும் முடியாது மன்னா...பருவ மழை பல்டி அடித்தால் வெயில் வெளுத்து கட்டுகிறது.

மன்னர்:அப்போ வெயிலுக்கு இதமாக மோர் அருந்தவேண்டிதானே.

மந்திரி:அதுவும் முடியாது மன்னா...உணவு படைத்த இடங்களை எல்லாம் உறைவிடம் ஆக்கியதால் புற்கள் இன்றி மாடுகளின் வயிர் வற்றி பால் பெற இயலவில்லை.ஆகையால் மோரும் இல்லை.

கபாலி:ஆமா மோர் என்னத்துக்கு.ஒரு பாட்டில் பீர் போதும்.ஆனா அதகூட ரேட் எத்திபுட்டாணுக கவர்ன்மென்ட்.

மன்னர்:என்ன கொடுமை இது...உணவு தரும் நிலத்தில் உறைவிடமா.இதனால் நம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அறிவு கூடவா இல்லை.

மந்திரி:எங்கே மன்னா...கல்வி இருந்தால் தானே அறிவு இருக்க.அடிப்படை கல்வியே அடிபட்டு போனால் அடிமட்ட மக்கள் தரைமட்டம் ஆவது உறுதி. 

மன்னர்:ஏன் நம் நாட்டில் தலை சிறந்த கல்விக்கூடங்கள் இல்லையா...

மந்திரி:கல்விக்கூடங்கள் இருக்கு.கல்வியில் தரம் தான் இல்லை.

கபாலி:சரியாய் சொன்ன முந்திரி ச்சா மந்திரி.படிப்பு இல்லேன்னா கூட உழைப்பு வச்சி ஓட்டிக்கலாம்.ஆனா பாதுகாப்பு இல்லையே நைனா.ரோடு குண்டும் குழியுமா இருக்கேன்னு இஸ்கூல்  பஸ் ல புள்ளைகள அனுப்ச்சா,அந்த பஸ்லையே குழி கீதே பா.

மன்னர்:ஐயகோ...என் மனம் பதறுகிறது.

கபாலி:என் சனம் கதறுது அண்ணாத்த...இதுக்கெலாம் காரணம் யாரு.நீதானே.உள்ளையே குந்திகினு குறைய கேட்டா எப்படி.ஏரியாவாண்ட வந்து ஒரு ரவுண்டு வுட்டா தெரியும்.

மந்திரி:எங்கள் மன்னரும் தினம் ஒரு ரவுண்டு விடுகிறாரே.

கபாலி:அட,நான் பாட்டில்ல சொல்லல மந்திரி,எங்க வுட்டுல சொல்லுறேன்.

மந்திரி:அங்கே வந்து பார்ப்பது கஷ்டம்.

கபாலி:இங்கியே குந்திகினு கிடந்தா குஷ்டம்.
இப்படி சொன்ன எப்புடி...அப்போ யாருதான் வந்து பார்க்கிறது?

மன்னர்:அதான் உங்க தொகுதி அமைச்சர் உள்ளார் அல்லவா?

கபாலி:யாரு அந்த குளத்துல தூங்குறவனா?

மந்திரி:குளத்தில் தூங்குபவர் இல்லை.குலோத்துங்கன்.

கபாலி:அவனத்தான் சொல்றேன்.வருவான் ஆடி மாசம் ஆத்தாளுக்கு கூழ் ஊத்துனா ஒ.சீ ல ஊத்திகினு போவ.கஸ்மாலம்,எங்களுக்கு வர நிதி ல பாதிய அவன் பொஞ்சாதிக்கும்,மீதிய அவன் சாதிக்கும் குடுதிடுறான்.

மன்னர்:அப்போ உங்களுக்கு?

கபாலி:நாமம் தான்.நாட்டை முழுசா வலைச்சிகிட்டு எங்கள நாக்கு வழிக்க கூட வக்கிலாதவனா ஆக்கிடாங்க பேமானி.

மன்னர்:இந்த கவலையை போக்க என்ன செய்ய வேண்டும்.

கபாலி:ஒன்னியும் வேண்டாம் அண்ணாத்த.ஒரு பாட்டில் சரக்கு,கொஞ்சம் முறுக்கு.அம்புட்டு தான்.

முனிமா:அடி செருப்பால...உன்னமாதிரி ஆளுக பாட்டிலுக்கும்,துட்டுக்கும் ஆசைப்பட்டு போறதால தான் நம்ம நாடு இப்புடி கீது.

கபாலி:அஹ..சொல்லிடாங்கட சோனியா காந்தி.முனிசிபாலிட்டி ல மொற வேலை பாக்குற மொள்ள நாயு...என்னமா சவுண்ட் வுடுது பாரு.

முனிமா:மொற வேலை பார்த்தாலும் உழைச்சுதான் சாபிடுறோம்.உன்ன மாதிரி அடிச்சு தின்னால.இவன் கிடக்கிறான் சாமி,எங்க ஏரியா ல மளிகை சாமான் விலை எல்லாம் ஏறி போச்சு.

கபாலி:மலிவு விலை சரக்கு கூட ஏறி போச்சு சாமி.

மந்திரி:அதான் அரசு நியாய விலை கிடைகளில் குறைந்த விலைகளில் கிடைகிறதே.

கபாலி:என்னது சரக்கா?

முனிமா:அடச்சே..கம்முனுகிட...அங்க விலை மட்டுமா குறைவா இருக்கு...அரிசி,பருப்பு ல கல்...மாவு ல பூச்சின்னு தரமும் குறைவாதான் சாமி இருக்கு.

மன்னர்:அப்போ நிறம்,தரம் இரண்டும் எதில் நிரந்திரமாய் இருக்கும்?

கபாலி:த்ரீ ரோசஸ் அண்ணாத்த.அதுல சுவையும் சூப்பரா இருக்கும்.ஒரு தபா டேஸ்ட் பண்ணேன்.த்ரிஷா கூட வருவா அதா குடிச்சா...

மன்னர்:என்னது த்ரிஷா வா?

மந்திரி:மன்னா..மன்னா...மாமன்னா

கபாலி:நீங்க ஒரு மாமா மன்னா...அதானே

மந்திரி:அதேதான்

முனிமா:தண்ணி சரியாய் வரதில்லை.நிலத்தடி நீர் மோசமா இருக்கு.மண்ணை எல்லாம் திருடுறாங்க.

மன்னர்:ஐயகோ,இதை எல்லாம் காவல் துறை பார்பதில்லையா,கேட்பதில்லையா?

கபாலி:பார்ப்பாங்க..கேட்பாங்க...அதனால் தான் அவங்களுக்கும் பாதி தந்திட்டு போறாங்க.அவங்களும் இவங்களை விட்ட்றாங்க.இதெல்லாம் ஒரு குடுக்கல் வாங்கல் தான்.பங்காளிகளுக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே.

மந்திரி:இந்த நாட்டில் மண்ணுக்கு பாதுகாப்பே இல்லையா?

முனிமா:மண்ணுக்கு மட்டும் இல்லை.பொண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை.

கபாலி:ஆமா சாமி..கவுன் போட்ட பொடிசுகள இருந்து,அதே கவுன்ன என்லார்ஜ் பண்ணி போடுற இளசுக வரை ஒருத்திய விடுறதில்லை.சம்டைம்ஸ் கிழவிகளை கூட கண்டம் பண்ணிடுறாணுக.

மன்னர்:இந்த பாலியல் வன்முறைக்கு எதிர்ப்பு குரல் இருப்பதில்லையா..

கபாலி:திருகுரளுக்கே மதிப்பு இல்லை.இதுல எங்கத்த எதிர்ப்பு குரலுக்கு கொடுக்க போறானுக.

மன்னர்:அப்போ இதையெல்லாம் யார் தான் தட்டி கேட்ப?

கபாலி:கேப்டன் குஜய்காந்த்..

மன்னர்:அவர் கேட்பாரா?

கபாலி:தாராளமா கேட்பாரு..நீங்க என்ன திட்டினாலும்,கண்டமேனிக்கு கழுவி ஊதினாலும் பொறுமையா கேட்பாரு.

மந்திரி:அப்போ வேற யாரு?

கபாலி:கொலைஞர் ஐயா

மன்னர்:ஆக்ஹா,பெயரிலேயே மங்களகரம் இருக்கிறது.

கபாலி:கரெக்டா சொன்ன நைனா.மங்களகரமா மஞ்சா கலர் துண்ட போட்டுகினு தாத்தா வந்துச்சின்னு வையு விசில் பறக்கும்.

மன்னர்:அப்புறம்?

முனிமா:அப்புறம் என்ன.ஈ கூட மொய்க்காது...பேச்சுல கில்லாடி...செயல தான் கில்மாடி..ஊழல ஊறி திளைத்த கட்சியில் காலம் காலமா "இருக்கிறாரு"

மந்திரி:அவரும் இல்லையெனில் யாரு?

கபாலி:அதன் கீரங்கலே அம்மா.

மன்னர்:என்னது உங்கம்மாவ?

கபாலி:எங்கம்மா இல்லை.பயலலிதா அம்மா.

மன்னர்:அவங்க என்ன பண்ணாங்க?

முனிமா:அவங்க என்னனமோ பண்ணாங்க.ஆனா எதுவும் எங்க நிலைய உயர்த்தல.பொருட்கள் விலைய தான் உயர்திச்சி.

கபாலி:இன்னும் கைகோ,சோமதாஸ்,பருமாவலவன்,சாமான்ன்னு நெறைய பேரு இருக்காங்க.ஆனா அவங்களால எங்களை இல்லை,அவுங்களையே இன்னும் உயர்த்திக்க முடில பாவம்.யாரு பெத்த புள்ளைகளோ.

மன்னர்:அப்போ இவர்கள் எல்லாம் எதற்காக இருக்கிறார்கள்?

கபாலி:அது தெரியாமதான இத்தன வருஷமா நாங்க இருக்கோம்.

மந்திரி:எனக்கு தெரியும் மன்னா?

மன்னர்:அப்போ கூறுங்கள் மந்திரியாரே.

மந்திரி:நாட்டை முழுவதுமாய் சுரண்டதான்.

முனிமா:இதுக்கு மேல சுரண்ட என்னருக்கு செவுத்துல கிடக்கிற சுண்ணாம்பு தான் கிடக்கு.

மன்னர்:இவர்களை எல்லாம் நான் சிறையில் அடைக்கிறேன்.

கபாலி:இவுங்க பார்க்காத சிறையா...உங்களையே கம்பெனிக்கு குத்திட்டு போய்டுவாங்க சிறைக்கு.வுட்டா உங்களையே அடிமையும் ஆக்கி கட்டளையெல்லாம் போடுவாங்க.

மன்னர்:என்னது கட்டெறும்பின் கட்டளைக்கு காட்டெருமை கட்டுபடுவதா...முடியாது....அந்த சுறாக்களின் சுரண்டலுக்கு இந்த சுனாமி சுழலாது என்று அவர்களிடும் சொல்.

கபாலி:அத்தை நீயே சொல்ல வேண்டித்தானே.

மன்னர்:ஹ்ம்ம்ம்....

கபாலி:என்ன முறைப்பு.இம்மாம் பேசுறியே..எங்கே நீ வந்து எங்க பிரச்சனைய தீரு பார்ப்போம்.

மன்னர்:அஹ.அஹ..அது.வந்து....அவரவர் நாட்டு பிரச்சனையை அவரவரே தீர்க்க வேண்டும்.

கபாலி:சோக்கா ஜகா வாங்குறியே அண்ணாத்த....நீ வந்தாலும் ஒன்னியும் கையிட்டிருக்க மாட்ட.

முனிமா:அவனை முறைக்காத சாமி.அவன் சொல்றது நிசம் தான்.இங்க பிரச்சனை அவங்க இல்லை.எங்க பிரச்சனைய புரிஞ்சிக்காதவங்கள தேர்ந்தெடுத்தோம் பாரும்,எங்ககிட்ட தான் பிரச்சனை.நாங்க காண்டி மாறுன எல்லாம் மாறும் சாமி.

மன்னர்:அந்த மாற்றம் எப்போ வரும்?

கபாலி:அஹ..மாற்றான் பட ஹீரோ சூர்யா வந்தா வரும்.அவுருதான் மாற்றம் ஒன்றே மாறாதது.உங்கள் வாழ்வை மாற்ற போகும் கேள்விகளோடும்,கோடிகளோடும் சூர்யான்னு சொல்வாரு.

முனிமா:யோவ்,கம்முனு கிடையா கபோதி.அது எப்போ வரும் ன்னு தெரில சாமி.ஆனா எதுவானாலும் நாங்க தாங்குவோம்.அப்படி இல்லைனா,

கபாலி:குவார்ட்டர் வுட்டு தூங்குவோம்.

முனிமா:த்தே ச்சி வாயா மூடு பேமானி.எப்போ பாரு குவார்ட்டர்ன்னு திரியுது.அப்படி எதுவும் இல்லன்னா பிரச்சனைய சமாளிச்சு வாழுவோம் முடிஞ்சவரை.சமாளிப்பும்,சிரிப்பும் தான் எங்க சொத்து சாமி.

கபாலி:ஆமாம் அண்ணாத்த...எம்மாம் பெரிய ப்ரோப்ளம்னாலும் அதை சமாளிக்கிரதுல நாங்க சாம்பியன்ஸ்.ஹஹஹஹஹா...வர்ட்டா அன்னத்தா..வரேன் நைனா...அப்பப்ப ஏரியாவாண்ட வா...நைட் வந்தா ஒரு கட்டிங் வுட்டு கலக்குவோம்.ஓகே வா..பை...

முனிமா:வாழுறதுக்கு வசதி வேணும்னு கேக்கலை.வாழுற வாழ்கைல நிம்மதி வேணும்னு தான் கேக்குறோம்.முடிஞ்சா செய்யுங்க சாமி.நாங்க வாரோம்.வணக்கம்.




Comments

Popular posts from this blog

Support The Champs

MA(DAI)YAN CALENDER

நானா நீயா