நாட்டாமை நாக்-அவுட்
நாட்டாமை:எல்லாரும் இங்க எதுக்கு கூடி இருக்கீங்கன்னு தெரியுமா?
காத்தமுத்து:தெரியாது சாமி.ஊருல கரண்ட் இல்லை.அதான் வேக்காடா இருக்கேன்னு இங்க வந்தோம் சாமி.சட்டு புட்டுன்னு ஆரம்பீங்க.பொழுது போகணும்.
நாட்டாமை:நம்ம பொன்ராசு பெத்த சின்ராசு...நம்ம ராக்காயி பெத்த மூக்காயிய தூக்கிட்டு போய்
மக்கள்:தூக்கிட்டு போய்...
நாட்டாமை:தூக்கிட்டு போய் குளத்துல போட்டான்.
மக்கள்:அவ்வளவு தானா...
வெள்ளைச்சாமி:அடச்சா...இதுக்கா கூட்டத்தை கூட்டுனீங்க...குளத்துல தானே போட்டான்.கெடுத்தா போட்டான்...இதுல என்ன தப்பு?
நாட்டாமை:என்ரா சொல்லிபோட்ட நீயு.தூங்குறதுக்கு தரையும்,தூக்குறதுக்கு முறையும் முக்கியம் டா.
காத்தமுத்து:அவனுக்கும் முறை இருக்கிறதாலதான் அவன் முறை மாமன் யா.
நாட்டாமை:என்னது அவன் முறை மாமன் னா...(ஆகா முறை தெரியாம முறைசிட்டோமே)..அப்படியே முறை இருந்தாலும் பண்பாடு வேண்டாம்.இப்படிதான் போன வாரம்,வீட்டுல பங்காளிகளோட ஆட்டம் போட்டு இருக்கான்.வயசுக்கு வந்த தங்கச்சிய வீட்டுல வச்சுக்கிட்டு இப்படியா ஆட்டம் போடுறது.
சின்ராசு:அதான் அவளை வெளிய அனுப்பிட்டு ஆட்டம் போடலாம்னு சொன்னேன்.பயலுக கேக்கலை.
நாட்டாமை:அவங்க சொன்னாங்கன்னா உனக்கு எங்கட போச்சி புத்தி?
அம்சமணி:இருந்தா தானே போறதுக்கு..அதான் இல்லையே...
நாட்டாமை:யார்ரா அது?
அம்சமணி:நாந்தாணுக அம்சமணி...சின்ராசு பங்காளிங்க.
நாட்டாமை:ஒ,நீதானா அது.உன்கூட சேர்ந்த பிறவுதான் இவன் கெட்டு போய்ட்டான்.
ராசப்பா:இல்லன்னா மட்டும் கலெக்டர் ஆகிட்டு போயிருப்பாரு...
நாட்டாமை:யார்ரா அவன் குறுக்குல பேசுறது?
ராசப்பா:யார அது...ஐயா கேக்குராருல..யாரது...ஐயா,எவனோ பொசகெட்ட பையன் பொசுக்குன்னு பேசிபுட்டான்.நீங்க பேசுங்கையா..
நாட்டாமை:பாதிக்க பட்ட ராக்காயி பெத்த மூக்காயிக்கு என்ன பண்ணலாம்னு சொல்றீங்க?
காத்தமுத்து:வேறென்ன.எவன் தொட்டு தூக்குனானோ அவனே அவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டிதான்.
நாட்டாமை:என்னது கல்யாணமா...செல்லாது செல்லாது..
காத்தமுத்து:ஏன் செல்லாது..உங்களுக்கா கல்யாணம் பண்ண போறோம்.அவன் முறை பொண்ணுக்கு அவனோட கல்யாணம் பண்ண போறோம்.இதுல என்ன?
நாட்டமை:(அப்போ என் நிலைமை)என்றா இது.அப்போ ஒரு பொண்ணை மடக்குறதுக்கு ..ச்சா..மணக்குறதுக்கு அவளை தூக்கிட்டா மட்டும் போதுமா
வெள்ளைச்சாமி:ஏன் அவ ஆத்தாகாரியவும் தூக்கனுமா?
நாட்டாமை:மூட்ரா வாயா.நம்ம மன்னுக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு.
காத்தமுத்து:அப்போ நமக்கு ஒன்னும் இல்லிங்கலாயா?
நாட்டாமை:நான் அப்படி சொல்லலையாக்கும்.நம்ம ஊரு வழக்கப்படி பொண்ணுக்கு விருப்பமில்லாதவன கட்டிக்க சொல்லகூடாது.மீறி சொன்னா,அந்த கல்யாணம் செல்லாது.என்னய்யா சொல்றீங்க?
நாச்சியப்பா:ஆமா,ஆமா..செல்லாது..செல்லாது..
அம்சமணி:பிடிச்சா ஆசிர்வாதம் பண்றானுக இல்லைன்னா வாக்குவாதம் பண்றானுக.இப்படியே விதண்டாவாதம் பண்ணிக்கிட்டு இருந்தா பக்காவாதம் வந்து பரலோகம் தான் போய் சேருவீங்க.
சின்ராசு:சரியாய் சொன்ன அம்சா.ஆமா,என்கிட்டே அப்படி என்ன குறைய கண்டுடீங்கன்னு இப்படி குத்தம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க?
நாட்டாமை:என்னடா பண்ணலை.கரும்பு தோட்டத்துல கண்ணம்மா கூட கபடி விளையாடுன விஷயம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா...
ராக்காயி:மாமா....நான் இருக்கும்போது கண்டவ கூட என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு...
சின்ராசு:அட இரு புள்ள.ஆமா,நான் விளையாடுனதா உங்களுக்கு யாரு சொன்னாக?
நாட்டாமை:நம்ம மொக்கசாமி மவன் சின்னசாமி தான்
சின்ராசு:இந்த சின்னபையன் பேச்சை எப்படி நம்புறது?
நாட்டாமை:குழந்தையும் தெய்வமும் ஒண்ணுல.எப்பவும் பொய் சொல்லாது.எலேய் சின்னசாமி,கரும்புதொட்டதுல கண்ணம்மா கூட கபடி விளையாடினது யாருல?
சின்னசாமி:சின்ராசு அண்ணன்தான்.
சின்ராசு:கரும்புதோட்டதுல கண்ணம்மா கூட கபடி விளையாடினது நாந்தான்னு உனக்கு யாருல சொன்ன?
சின்னசாமி:நம்ம நாட்டாமை கூட பக்கத்துக்கு தோப்புல பல்லாங்குழி ஆடுன பவளக்கொடி அக்கா தான் சொல்லுச்சி.
நாட்டாமை:என்னது நான்னா...சின்ன பையன் ஏதோ பொய் சொல்றான்.நம்பாதீங்கள.
சின்ராசு:நாட்டாமை..சின்னபையன் பொய் சொல்லமாட்டான்.ஏன்னா,குழந்தையும் தெய்வமும் ஒன்னு.
நாட்டாமை:அப்போ நான் பொய் சொல்றேன்னு சொல்றியா..என்ரா பேசுற...நான் யாருன்னு தெரியும்ல.இந்த ஊருல எனக்குன்னு ஒரு பேரு இருக்கு...மருவாதி இருக்கு..கெளரவம் இருக்கு..
கணக்கு:ஐயா,உங்களுக்கு இத்தன இருக்கா.இத்தனை நாளா உங்ககூடவே இருக்கேன்.இதுலாம் சொல்லவே இல்லையேயா.
நாட்டாமை:கணக்கு..
கணக்கு:ஐயா?
நாட்டாமை:அமுக்கு..
கணக்கு:சரிங்கையா...
நாட்டாமை:அஹ,அப்புறம் எதுல வுட்டேன்?
ராசப்பா:கணக்க அமுக்குறதுல வுட்டீங்க..
நாட்டாமை:எவண்டா அது?
ராசப்பா:ஐயா கேக்குறாருல..யாரா அது...குறுக்கால குறுக்கால பேசுறது..இன்னொருக்கா பேசுனீங்க..வெட்டிபுடுவேன் வெட்டி..சாக்கிரதை...சாமி,நீங்க பேசுங்க.
நாட்டாமை:இப்போ முடிவா என்னதான் சொல்றீங்க?
காத்தமுத்து:ரெண்டு பேருக்கும் முடிச்சு போட்டறலாம்னு சொல்றோம்.அதுவும் நீங்கதான் செய்யணும்.
நாட்டாமை:மானம் உள்ளவன் எவனும் இதை செய்ய மாட்டான்.
ராசப்பா:அப்போ,நீங்க செய்யலாம்.பிரச்சனை இல்லை.
நாட்டாமை:யார்ரா அது...நான் மானம் உள்ளவன் டா.
காத்தமுத்து:அதான் பல்லாங்குழில விழுந்துடிச்சே.
நாட்டாமை:என்னையாடா ஏசுறீங்க.இப்போ சொல்றேண்டா தீர்ப்பு.இந்த சின்ராச ஊர விட்டு தள்ளி வைக்குறேன்.ராக்காயிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைக்கிறேன்.
சின்ராசு:நாட்டாமை....தீர்ப்ப மாத்தி சொல்லு..
நாட்டாமை:முடியாதுன்னு சொன்னா?
அம்சமணி:நாட்டாமைய மாத்த சொல்லுவோம்.
நாட்டாமை:(அஹ,பயலுக பதவிலையே குறியா இருக்கானுவ)சரி, ஊருக்கு கட்டுப்பட்டு தீர்ப்ப மாத்துறேன்.
ராசப்பா:ஊருக்கு கட்டுபடலைன்னா ஊறுகா போற்றுவாங்கடியோவ்...
நாட்டாமை:உங்க எல்லார் ஆசையோடும்,என் ஆசியோடும் சின்ராசு,ராக்காயிக்கு கல்யாணத்தை நடத்துறோம்.இதான் தீர்ப்பு.
ராசப்பா:இதாண்டா தீர்ப்பு..
நாட்டாமை:யார்ரா அது...தோ இர்ரா வரேன்...
ராசப்பா:ஹே கரண்ட் வந்துடிச்சி..கரண்ட் வந்துடிச்சி..எல்லாரும் கிளம்பு கிளம்பு...ஐயா கிளம்புற நேரம் கரண்ட் வந்துடிச்சி..இது தெரிஞ்சிருந்த ஐயாவ எப்பவோ கிளப்பி இருப்போமே.சரி,சரி..எல்லாம் கிளம்பு கிளம்பு.பொழுது போகுது,பொழப்ப பாரு..பொழப்ப பாரு..அடுத்த பஞ்சாயத்துல பார்ப்போம்..கிளம்பு கிளம்பு..
awsm one la makka.... still cant stop my laugh...
ReplyDeletenijamma va soldra...non-stoppa sirikkira alavukka naan eluthirikken..heiii enna vachi comedy kemedy pannalaiyey
ReplyDelete